தொடர் மழை காரணமாக, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் தெங்குமரஹாடா கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாளவாடி, பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், நேற்று காலை தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்த நிலையில், விவசாய நிலங்களில் நீர் தேங்கியது. பள்ளி, கல்லூரி மற்றும்பணிக்குச் செல்வோர் மழையால் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை அடைய மாயாற்றைக் கடந்து செல்ல வேண்டும். தொடர்மழை காரணமாக, மாயாற்றில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு குறையும் வரை ஆற்றைக் கடக்க வேண்டாம்என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவசர தேவைக்கு மட்டும், பரிசல் மூலம் சிலர் ஆபத்தான முறையில் மாயாற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.