காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வாகனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மடம் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து ஒகேனக்கல் வரை நேற்று காலை தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வாகனப் பேரணி நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சுற்றுலா மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ‘காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையும், இதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கையும் கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் நமது காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும்’ என்று பலரும் பேசினர்.

ஆர்ப்பாட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, ‘காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணையை கட்டினால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியாற்றின் மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்’ என்றார்

இந்த நிகழ்ச்சிகளின்போது, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், மாநில அவைத் தலைவர் வெங்கடாசலம், மாநில செயலாளர் கே.வி.சின்னசாமி, மாவட்ட செயலாளர்கள் சக்திவேல் (தருமபுரி), பெரியசாமி (ஈரோடு) உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.