காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையை கர்நாடகம் கட்ட எத்தனிப்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஏகோபித்து எதிர்த்துள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் நிலையைப் பார்த்தால், அச்சம்தான் மேலிடுகிறது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக இசைவு பெறாமல் வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாத நிலையில், மேகேதாட்டுப் பகுதியில் கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாகக் கடந்த ஏப்ரலில் வெளிவந்த செய்திகள் கூறின. இதன் அடிப்படையில், தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் சென்னை அமர்வு தாமாக இவ்விவகாரத்தை 26.05.2021-ல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேகேதாட்டுப் பகுதியை ஆய்வுசெய்ய சுற்றுச்சூழல், வனத் துறை, காவிரி மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரிகள் அடங்கிய ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. அந்த ஆய்வுக் குழு 05.07.2021-க்குள் தம் அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.