சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை ரூ.4,528 கோடியில்,12 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் அமையவுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையில் 45.8 கி.மீ நீளத்திற்கு அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் வழியாகவும், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கு தி.நகர், வடபழனி, போரூர் வழியாகவும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47.0 கி.மீ நீளத்திற்கு வில்லிவாக்கம், ராமாபுரம், மேடவாக்கம் வழியாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் நீட்டிப்பு திட்டமான விமான நிலையம் மூலம் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணிக்கு தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி விமான நிலையம் மூலம் கிளாம்பாக்கம் வரை 15.46 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் அமைய உள்ளது. முழுவதும் உயர்மட்ட பாதையாக அமையும் இந்த வழித்தடத்தில் 12 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த திட்டம் ரூ.4,528 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தையும், விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.