‘மிஷன் இம்பாசிபிள்’ படத்திற்காக டாம் குரூஸ் மேற்கொண்ட சண்டைக்காட்சி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் காற்றில் பறந்தும், பைக்கில் சீறியும் பாய்கிறார் அவர். சினிமா வரலாற்றிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய சண்டைக்காட்சியாக இது இருக்கும் எனத் தெரிகிறது.

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸ், ஆக்‌ஷன் கதைகளில் நடிப்பதில் வல்லவர். அவரது நடிப்பில் வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் படங்கள் மிகவும் பிரபலம். தற்போது இந்த பட வரிசையின் 7-வது பாகமான ‘மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் ஒன்’ வரும் 2023-ல் வெளியாக உள்ளது. இதன் இரண்டாவது பாகமும் 2024-ல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வழக்கம் போலவே ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது. அந்த வகையில் மலை உச்சியில் அமைந்துள்ள ரேம்பில் (சாய்வுதளம்) இருந்து பைக் ஓட்டி வரும் டாம் குரூஸ் அப்படியே பள்ளத்தில் விழும் சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்துள்ளது படக்குழு. சினிமா வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சண்டை பயிற்சியாக இது இருக்கும் எனத் தெரிகிறது. அதற்காக டாம் குரூஸ் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு பின்னர் அந்த ஸ்டண்டை செய்துள்ளார். ‘நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இது அதிபயங்கரமானது’ என டாம் குரூஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக தீவிரமாக ஒத்திகையும் மேற்கொண்டது படக்குழு. மேலும் தொழில்நுட்பத்தின் துணையையும் இதில் நாடியுள்ளனர். காற்றின் வேகம் போன்றவற்றை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் ஸ்டண்ட் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், ஏதேனும் ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது உயிருக்கு ஆபத்து அல்லது பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்தும் என சண்டைப் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதை அறிந்தே இந்த ரிஸ்க் எடுத்துள்ளார் டாம் குரூஸ். அவரது முயற்சிக்கு சிறந்த பலனும் கிடைத்துள்ளது.