நீட் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவாரேயானால் அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இதனால், நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பறிக்கின்ற வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிமைப் போராட்டம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் 1950இல் அமலுக்கு வந்த ஆறு மாதத்திலேயே தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீட்டு முறை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அன்றைய மாநில காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையொட்டி, தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் தீவிரத்தன்மையை அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜர், அன்றைய பிரதமர் நேருவிடம் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதையொட்டி, அரசியல் நிர்ணய சபையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாகத்தான் தமிழகத்தில் சமூக நீதி என்கிற உரிமைப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்தப் பின்னணியில் சமூக நீதிக்கான போராட்டம் பல நீதிமன்றத் தடைகளைத் தகர்த்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இத்தகைய வெற்றியைப் பெறுவதற்கு மேலும் வலுகூட்டுகிற வகையில் 2004இல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிற வகையில் 2006இல் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீடு பெறுகிற உரிமை கிடைத்தது. இது சமூக நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வரலாறு காணாத வெற்றியாகும்.

எனவே, உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடுகிறவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுகிற போராட்டத்திலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் தற்காலிகமாக முடக்கி வைக்கலாம். ஆனால், தமிழக அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும். அதற்குப் புறம்பாக அவர் செயல்படுவாரேயானால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவே கருத வேண்டியிருக்கும். இந்த நிலைக்கு தமிழக ஆளுநர் தம்மை உட்படுத்திக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம். அதையும் மீறி, தமிழக மக்களுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவாரேயானால் அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.