சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாமல் இருந்தால், கடுமையான அபராதம் விதிப்பதைவிடுத்து, போட்டியை தலைகீழாக மாற்றும் விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல்பந்தை வீசாவிட்டால், பீல்டிங் செய்யும் அணியில் 30 யார்ட்ஸ் வட்டத்துக்குவெளியே இருக்கும் பீல்டர்களில் ஒருவர் மட்டுமே நிற்க அனுமதிக்கப்படும், மற்ற 4 வீரர்களும் வட்டத்துக்கு உள்ளே வர வேண்டும் என்ற புதிய விதியை அறிமுகம் செய்திருக்கிறது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சர்வதேச டி20 போட்டிகளில் பந்துவீசும் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசாவிட்டால் அந்த அணியின் கேப்டன், வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் விதி நடைமுறையில் இருக்கிறது. ஐசிசியின் வீரர்கள் நடத்தை விதிகள் 2.22 பிரிவி்ல் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதைக்கடந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசும் அணி அந்த இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசாவிட்டால். 30 யார்ட்ஸ் வட்டத்துக்குவெளியே நிற்கும் 5 பீல்டர்களில் 4 பேரை வட்டத்துக்கு உள்ளே கொண்டுவந்துவிட்டு, ஒரு பீல்டரை மட்டுமே வைத்து மீதமுள்ள 5 பந்துகளையும் வீச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
புதிய விதியால் என்ன நடக்கும்
வழக்கமாக 30யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே 5 பீல்டர்களை கடைசி ஓவரில் பீல்டிங் செய்யும் அணி நிறுத்தலாம். ஆனால், இந்த விதியின்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரின் முதல் ப ந்தை பந்துவீசும் அணி வீசாவிட்டால், 30 யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே ஒரு வீரரை மட்டுமே நிறுத்த முடியும், 4 வீரர்களையும் வட்டத்துக்குள் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்
இவ்வாறு நடந்தால், பேட்டிங் செய்யும் அணி கடைசி 5 பந்துகளையும் வெளுத்து வாங்கும், அதிகபட்சமாக 30 ரன்கள் அதாவது 5 சிக்ஸர்கள், அல்லது 5 பவுண்டரிகளையும் கூட விளாச முடியும். ஒரு பீல்டரை மட்டும் வைத்து மைதானம் முழுவதையும் பீல்டிங் தடுப்பில் ஈடுபடமுடியாது.
இந்த விதியால் ஆட்டத்தின் போக்கு கடைசி ஓவரில் எப்படி வேண்டுமானாலும் மாறும். தோற்க வேண்டிய அணி, வெற்றி பெறக்கூடும், குறைந்த ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அணி கூடுதலாக 30 ரன்கள் வரை சேர்க்க முடியும். இந்த விதியால் டி20 கிரிக்கெட்டின் கடைசி ஓவர் சுவாரஸ்யமாகஇருக்கும்.
2-வது மாற்றம்
மற்றொரு மாற்றமாக, ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு இன்னிங்ஸில் 2நிமிடங்கள் 30 வினாடிகள் இடைவேளை எடுக்கலாம். இந்த இடைவேளைய எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம் என்று ஐசிசி திருத்தியுள்ளது.
இந்த புதிய விதிகள் வரும் 16ம் தேதி மே.இ.தீவுகள், அயர்லாந்து இடையே நடக்கும் டி20 தொடரிலிருந்து அமலாகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் எந்தஅணியாவது பந்துவீசவில்லையென்றால், பேட்டிங் செய்யும் அணிக்கு ரன் மழைதான் என்பதில் சந்தேகமில்லை.