தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. இதில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நிலவரம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில் விபத்துப் பகுதியில் ரயில்வே துறை மேற்கொண்டுவந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 261 பேர் பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் ரயில்கள் மோதலைத் தடுக்கும் அமைப்பான ‘கவாச்’ கிடைக்கவில்லை.
இதுவரை 100-க்கும் அதிகமானவர்கள் கருணைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்காக பாலசோர், சோரோ, பஹானாகா ஆகிய இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மார்க்கத்தில் இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஒடிசா மாநில அமைச்சர் அடானு சப்யசாசி நாயக், “எங்களின் முதல் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே. மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருக்க வேண்டுமென முதல்வர் தெரிவித்துள்ளார்” என்றார்.
நிகழ்விடத்தில் மம்தா பானர்ஜி: சம்பவ இடத்துக்கு நேரில் வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளைப் பார்வையிட்டார். மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். நாங்கள் நேற்று 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். இன்று 70 ஆம்புலன்ஸ்களையும் 40 மருத்துவர்களையும் அனுப்பி உள்ளோம்” என தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | அதன் விவரம் > ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சிறப்பு ரயில்கள்: ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.
தமிழக அமைச்சர் தகவல்: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். ஒடிசா ரயில் விபத்தை ஒட்டி சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ரயில் விபத்து தொடர்பாக முழு விவரங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். 2 மாவட்ட வருவாய் அலுவலர், 2 துணை ஆட்சியர், 4 தாசில்தார் கொண்ட அதிகாரிகள் குழுவும் ஒடிசா சென்றுள்ளது. இதுவரை 8 பேர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். நாங்கள் கோரமண்டல் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா விரைவு ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளோம். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தமிழகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
ஒடிசா முதல்வர் ஆறுதல்: விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இது மிகவும் துயரான விபத்து. உள்ளூர் மக்களுக்கும் குழுக்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் இரவு முழுவதும் பணியாற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள். ரயில்பாதுகாப்புக்கு எப்போதுமே முதல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். காயமடைந்த மக்கள் பாலாசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி: இந்த விபத்தை அடுத்து அது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார். மேலும், இன்றே சம்பவ இடத்துக்கு பிரதமர் வர உள்ளதாகவும், ரயில் விபத்தில் காயமுற்று கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் விபத்துப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு அதன் பிறகு பாலாசோர் மருத்துவமனைக்கு பிரதமர் செல்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ரத்த தானம்: விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வந்து ரத்த தானம் செய்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டு காலத்தில் நடந்த ரயில்வே விபத்துகளில் இது மிகவும் மோசமான விபத்து என்று கூறப்படுகிறது.