சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையின் ரூ.234.75 கோடி சொத்துகள், லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178.48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் தொடர்பாக இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சிபிசிஐடியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு புகார் கொடுத்தார். ‘இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் தவறான நிதிநிலை அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து 2 கட்டங்களாக ரூ.240 கோடி கடன் வாங்கி உள்ளது. சொன்ன காரணங்களுக்காக பயன்படுத்தாமல், இத்தொகையை வேறு காரணங்களுக்காக முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியன் வங்கிக்கு ரூ.312.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சரவணா ஸ்டோர்ஸ் பங்குதாரர்களான மறைந்த பல்லக்குத்துரை, பி.சுஜாதா மற்றும் ஒய்.பி.ஷிரவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாத சில அரசு அதிகாரிகள் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்தியன் வங்கியில் பெறப்பட்ட கடன் தொகை, வட்டியுடன் பல மடங்கு உயர்ந்ததால், சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிசிஐடி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், மறைந்த பல்லக்குத்துரை, பி.சுஜாதா மற்றும் ஒய்.பி.ஷிரவன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை கடந்த மே 26-ம் தேதி வழக்கு பதிவு செய்தது.

அதன் அடிப்படையில், சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான அசையா சொத்துகள் ரூ.234.75 கோடியை அமலாக்கத் துறை நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து, விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம்

இதேபோல, கோவை மாவட்டத்தை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின், கடந்த 2009-10 ஆண்டுகளில் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி தொழில் மூலம் கிடைத்த ரூ.910 கோடியை மறைத்து, சுமார் 40-க்கு மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தும், சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்ததும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக மார்டின் மற்றும்அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் மார்ட்டின் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டிடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ஏற்கெனவே ரூ.277.59 கோடி மதிப்புடைய சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும், ரூ.173.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இதுவரை மொத்தம் ரூ.451.07 கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.