காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்பைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக அதி கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி குடியிருப்புப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும் முடிச்சூர் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தது மட்டுமின்றி அவற்றை மனுக்களாகவும் பெற்றுக் கொண்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, ஊரகத் தொழில்துறை அமைச்சர் அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.