பிரபல வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் இருசக்கர வாகன சேவைகளைத் தரும் ஓலா நாட்டின் 75-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று தனது மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. செப்டம்பர் 8-ம் தேதி முதல் அதிகாரபூர்வ விற்பனை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஓலா மின்சார ஸ்கூட்டரை பலரும் முன்பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
ஓலா எஸ் 1 (S1) மற்றும் எஸ் 1 ப்ரோ (S1 Pro) என்ற இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்ய்பட்டன. 10 நிறங்களில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்கூட்டர்களில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் குரல் அடையாளம் கண்டு பதில் சொல்லுதல், தொடு திரை, சாவியின்றி பூட்டும் ப்ராக்ஸிமிடி லாக் வசதி, வாகனம் களவு போகாமல் தடுக்க எச்சரிக்கை செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.
ஓலா எஸ் 1 மாடல் ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 121 கி.மீ. தூரமும், எஸ் 1 ப்ரோ மாடல் 181 கி.மீ. தூரம் வரையும் செல்லும். எஸ் 1 ப்ரோ அதிகபட்சமாக மணிக்கு 115 கி.மீ. வேகமும், எஸ் 1 மாடல் மணிக்கு 90 கி.மீ. வேகமும் கொடுக்கும். 18 நிமிடங்கள் துரித சார்ஜ் செய்தால் இந்த இரண்டு மாடல்களுமே 75 கி.மீ. தூரம் வரை செல்லும்.
ஓலாவின் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தித் தொழிற்சாலை, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலா எஸ் 1 மாடல் விலை ரூ. 99,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ் 1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1,29,999.
அதே நேரம், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும், தயாரிப்புக்கும் இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு சலுகைகளை, மானியங்களைக் கொடுக்கிறது. உதாரணத்துக்கு டெல்லியில் அரசு மானியத்தோடு சேர்த்து ரூ.85,009க்கு ஓலா எஸ் 1 ஸ்கூட்டரை வாங்கலாம். அதே நேரம் குஜராத்தில் ரூ.79,000க்கே மானிய விலையில் கிடைக்கும்.
இந்த நிலையில் ஓலா மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி தாமதமாகி வருவதால் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு ஜனவரி தாமதமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 150 வாகனங்களை மட்டுமே தயாரித்து வருவதாகவும், ஏற்கெனவே ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்த பல வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஓலா எலக்ட்ரிக் ஏற்கெனவே பெற்ற 90,000 ஆர்டர்களை உடனடியாக பூர்த்தி செய்வது கடினம் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே டெலிவரி தேதி அக்டோபரில் இருந்து டிசம்பருக்கு மாற்றப்பட்டு தாமதமாகிவிட்டன, பிப்ரவரி மாதத்திற்குள் மீதமுள்ள ஆர்டர்களை பூர்த்தி செய்யலாம் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த நிறுவனம் பெற்ற 90,000 ஆர்டர்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் சிக்கல் நீடிக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் அந்த நிறுவனத்தின் வாகன கட்டுமானப் பிரிவு பாதியளவு செயல்படுவதும், பெயிண்டிங் பிரிவு முழுமையாக செயல்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகளாவிய செமிகண்டக்டர் பற்றாக்குறையே உற்பத்தி தாமதத்திற்குக் முக்கிய காரணம் எனக் கூறியுள்ளது. உலகளாவிய அளவில் இதற்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. சவால்கள் இருப்பது நிறுவனத்திற்குள் மட்டுமல்ல. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து டெலிவரிக்காகக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி காலக்கெடுவை மீண்டும் மீண்டும் தாமதப்படுத்துவது குறித்து சமூக ஊடகங்களில் தங்கள் ஏமாற்றத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த தடைகளை தாண்டி அந்த நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வாடிக்கையாளர்களிடம் நிலவுகிறது.