கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை.
துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி உள்ளிட்ட 7 விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு 24-ம் தேதி முதல் சுற்றுப் போட்டியும், 23-ம் தேதி பயிற்சியும் இருப்பதால் பங்கேற்கவில்லை. ஆதலால், இந்தியா சார்பில் 30 வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
டோக்கியோவில் நாளை தொடங்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. டோக்கியோவில் நாளை கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. ஜப்பானில் கரோனா பரவல் அச்சம் காரணமாக தொடக்க நாள் நிகழ்ச்சியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை. அணிவகுப்பில் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் மட்டும் பங்கேற்க உள்ளார்.
இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் நரேந்திர பத்ரா கூறுகையில், “ வரும் 24-ம் தேதி முதல் சுற்றுப் போட்டிகள் இருப்பதால், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால், இந்தியா சார்பில் வில்வித்தை, ஜூடோ, பாட்மிண்டன், பளு தூக்குதல், டென்னிஸ், ஹாக்கி (ஆடவர், மகளிர்), துப்பாக்கி சுடுதல் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீர்ரகள் அணிவகுப்பில் பங்கேற்க மாட்டார்கள்.
அணிவகுப்பு ஜப்பானிய அகரவரிசைப்படி இருக்கும் என்பதால், இந்தியா 21-வது இடத்தில் வரும். அணிவகுப்பில் இந்தியாவில் இருந்து ஹாக்கியில் இருந்து ஒருவர், குத்துச்சண்டைப் பிரிவில் 8 பேர், டேபிள் டென்னிஸில் 4 பேர், படகு ஓட்டுதலில் 2 பேர், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் பிரிவில் தலா ஒருவர், கத்திச்சண்டைப் பிரிவில் ஒருவர், அலுவலர்கள் 6 பேர் மட்டும் பங்கேற்கின்றனர்.
குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் தேசியக்கொடி ஏந்திச் செல்கின்றனர். பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பயிற்சியாளர்கள், அலுவலர்கள், மாற்று வீரர்கள் என 228 பேர் சென்றுள்ளனர். இதில் 125 வீரர், வீராங்கனைகள் அடங்குவர்.
இதில் தொடக்க நாள் அன்றே, ஹாக்கி போட்டியில் ஆடவர், மகளிர் அணியும், துப்பாக்கி சுடுதல், வில்வித்தைப் பிரிவில் வீரர்கள், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.