புனேயில் நடந்த தேசிய அள விலான தடகளப் போட்டியில் தமிழக பாரா ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் 29 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 16 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவது மிருந்து 1,200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளை யாட்டு சங்கத்தின் மூலம் மாநில தடகளப் போட்டியில் தேர்வான 80 பேர் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 11 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தேசிய அளவில் 5-ம் இடம் பெற்றனர்.

இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த முத்துராஜ், மதுரையைச் சேர்ந்த மனோஜ் ஆகியோர் குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தனர். இவர்களை அணி பயிற்சியாளர் ரஞ்சித் குமார், அணி மேலாளர் விஜய் சாரதி ஆகியோர் வழி நடத்தினர்.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத் தலைவர் சந்திர சேகர், செயலாளர் கிருபாகர ராஜா, பொருளாளர் விஜய் சாரதி ஆகியோர் வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்தனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.