இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணிக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்..

அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. அப்போது முதலே முன்னாள் கேப்டன் தோனியின் புகழை ரசிகர்கள் போற்றி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த கேப்டன்களில் தோனி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசி தொடர்களின் முக்கியப் போட்டிகளில் அணியின் வீழ்ச்சியை தவிர்க்க பலமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக தெரிகிறது. அதை ஐசிசி கோப்பைகளை நாட்டுக்காக வென்று கொடுத்த தோனியை வைத்து செய்யவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக அவருக்கு வாரியத்தில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட உள்ளதாம்.

அதுவும் டி20 கிரிக்கெட்டில் தோனியின் பங்கு அதிகளவில் இருக்கும் வகையில் இந்த அழைப்பு அமைந்திருக்கும் எனத் தெரிகிறது. அது நிரந்தர ரோல் எனவும் சொல்லப்படுகிறது.

பிசிசிஐ திட்டம்? – மூன்று ஃபார்மெட் கிரிக்கெட் காரணமாக தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிடின் வேலை பளு அதிகரித்துள்ள காரணத்தால் தோனியை டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்திக் கொள்ள வாரியம் விரும்புகிறதாம். இதன்மூலம் அணியின் தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் நம்புகிறதாம். இது தொடர்பாக பிசிசிஐ கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாம்.

தோனி: டி20 கிரிக்கெட்டின் இயக்குநர்? – சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது தோனி அணியுடன் பணியாற்றி இருந்தார். ஆனாலும் அது இடைக்கால பணியாக இருந்தது. வெறும் சில நாட்கள் மட்டுமே அந்தப் பணி இருந்த காரணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதனால், இந்த முறை அவருக்கு பெரிய பொறுப்பை டி20 கிரிக்கெட் அணி செட்-அப் சார்ந்து கொடுக்க பிசிசிஐ விரும்புகிறதாம்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்கு பிறகு தோனி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் எனத் தகவல். அதன் பிறகு அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்படுமாம். அதிலும் பிரத்யேக வீரர்கள் அடங்கிய குழுவை அவர் பார்வையில் வழிநடத்தி, அதனை இந்திய டி20 அணியாக உருவாக்கும் திட்டம் உள்ளதாம். முழுக்க முழுக்க தோனியின் திறன் மற்றும் விருப்பப்படி இந்த அணி கட்டமைக்கப்படும் எனத் தெரிகிறது. இது 2024 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்வாம்.