தோனி கேப்டன்சியில் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன், நடப்பு விஜய் ஹசாரே ட்ராபியில் பல சாதனைகளை உடைத்து வருகிறார். சங்கக்காராவின் உலக சாதனையைத் தகர்த்ததோடு ரோஹித் சர்மாவின் சாதனையையும் கடந்து சென்றார்.
தன்னை கழற்றி விட்ட சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடுகிறார் என்றே இவரது இந்த திடீர் எழுச்சி பார்க்கப்படுகிறது. விஜய் ஹசாரே டிராபி எனும் 50 ஒவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி சங்கக்காராவின் ஒருநாள் கிரிக்கெட் சாதனையைக் கடந்து சென்றார். குமார் சங்கக்காரா 2015 உலகக் கோப்பையில் 4 சதங்களைத் தொடர்ந்து அடித்தது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல் பிரதேச அணிக்கு எதிராக நாரயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 277 ரன்கள் விளாசினார். இதனையடுத்து ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் எடுத்த 264 ரன்கள் சாதனையையும் முறியடித்தார். இவரது இந்த அதிரடியில் தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 506 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இமாலய ரன்களை எடுத்தது. மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்தார்.
நாராயண் ஜெகதீசன் தன் தொடர் 5 சதங்கள் மூலம் விராட் கோலி, பிரிதிவி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் ஆகியோரையும் கடந்து சென்றார், இவர்கள் 4 சதங்களைத் தொடர்ச்சியாக எடுத்தது குறிப்பிடத்தக்கது. 50 ஓவர் கிரிக்கெட்டில் நாராயண் ஜெகதீசனின் 277 ரன்களே இப்போது உச்சபட்ச ஸ்கோராகும். முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர்கள் விவரம்:
- நாராயண் ஜெகதீசன் 277
- அலிஸ்டர் பிரவுன் – 268
- ரோஹித் சர்மா 264
- டியார்க்கி ஷார்ட் – 257
- ஷிகர் தவான் – 248.
ஜெகதீசன் விஜய் ஹசாரே டிராபியில் இந்த சீசனில் இதுவரை அதிக ஸ்கோர்களை எடுத்த வீரராகவும் திகழ்கிறார். 6 இன்னிங்ஸ்களில் 799 ரன்களை குவித்துள்ளார். இதே தொடரில் நாராயண் ஜெகதீசன் ஹரியாணாவுக்கு எதிராக 128, ஆந்திராவுக்கு எதிராக 114, சத்திஸ்கருக்கு எதிராக 107, கோவாவுக்கு எதிராக 168 என்று அதிரடி சதங்களை எடுத்ததும் கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் நாராயண் ஜெகதீசனின் பேட்டிங் திறமைகளை கண்டுகொள்ளாமல் அவரை அணியிலிருந்து விடுவித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
நாராயண் ஜெகதீசன் இந்த உலக சாதனை மற்றும் உள்நாட்டு சாதனைகளினால் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பலரது பாராட்டுக்களையும் ஈர்த்துள்ளார்.