ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 141 பேரும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 142 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 49 பேரும், கேரளாவில் 57 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு இதுவரை 8 மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2022 ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
”கரோனா வைரஸும், ஒமைக்ரான் வைரஸும் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. கரோனா பரவல், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு எடுத்து, சூழலை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில், அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.
அடுத்துவரும் பண்டிகைக் காலமான புத்தாண்டு, பொங்கல், மகர சங்கராந்தி ஆகியவற்றில் மக்கள் அதிகமாகக் கூடும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கலாம் என்பதால் மாநிலங்களே கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.
அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிகுந்த விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து நிலையிலும் விழிப்புடன் இருந்து தயாராக இருக்க வேண்டும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கையிலும் சமரசம் செய்வதோ, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோ, சுணக்கம் காட்டுவதோ வேண்டாம்.
உள்ளாட்சிகள், மாவட்ட அளவில் கரோனா பரவல், ஒமைக்ரான் பரவல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தகுந்த கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
நாட்டில் 2022, ஜனவரி 31-ம் தேதிவரை பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், சட்டத்தை மீறுவோர் மீது பிரிவு 51 60-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது. அனைத்து இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது