வேலூர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 110 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒமைக் ரான் வார்டுகளை தயார்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலக நாடுகள் மத்தியில் கரோனா வைரஸின் ஒமைக்ரான் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 38 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் மாநில அளவில் தொடங்கியுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
டிச.1-ம் தேதி 16 பேருக்கும் டிச.2-ம் தேதி 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக 50 படுக்கை களுடன் கூடிய ‘ஒமைக்ரான் தனி வார்டு’ ஏற்படுத்தியுள்ளனர். இங்கு தனிமைப்படுத்தும் வசதி, ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடியதாக ஏற்படுத்தியுள்ளனர். மேலும், தீவிர சிகிச்சைக்காக 4 படுக்கை களை தனியாக அமைத்துள்ளனர். ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான குழுவினர் அங்கு பணிபுரிய அனைத்து நடவடிக்கை களையும் எடுத்துள்ளனர்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 500 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை வார்டு உள்ளது. இங்கு, அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தியுள்ளனர். தேவை ஏற்பட்டால் அவற்றை சிறப்பு வார்டுகளாக மாற்றவும் தயாராக உள்ளனர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை களில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகள் உள்ளன. இங்கு தேவைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மருத்துவத் துறையினர் தயாராகி வருகின்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் உள்ள 2-வது தளத்தில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆக்சிஜன் வசதிகளும் உள்ளன. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பட்டியலும் தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “கரோனா 2-வது அலை உச்சம் தொட்டபோது 675 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு, தொற்றால் பாதிக் கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரசவம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தவிர்த்து அனைத்துப் பிரிவுகளும், கரோனா வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. தற்போது, கரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. இருப்பினும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் உள்ளன. அதே நேரத்தில் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
ஏற்கெனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்ட 48 மருத்துவர் களும் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களது பணி, ஒமைக்ரான் வார்டிலும் தொடரும்” என்றார்.