கேரளா மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் ஊடகம் நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். முதலமைச்சர் தனது உரையில், நாட்டின் பன்முகத்தன்மை, மொழி, நாடாளுமன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து கருத்து கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழி வாரி மாநிலங்களை உருவாக்கி கொடுத்தவர் முன்னாள் பிரதமர் நேரு. அப்போது அவர் இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என்று உறுதிமொழி அளித்தார். மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார் நேரு. ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 27 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது கண்டனத்திற்குரியது.

நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை கருத்துரிமை நசுக்கப்படுகிறது. இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள் உள்ளனர், பல கலாச்சாரம் கொண்ட மக்கள் உள்ளனர். எனவே, ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரி. ஜனநாயக இந்தியாவை எந்நாளும் நாங்கள் பாதுகாப்போம். மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்தால் தான் நாடு வலுப்பெறும் மகிழ்ச்சியாக இருக்கும். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலமே தவிர பலவீனம் அல்ல. தேசிய கல்விக் கொள்கை என்பது நாட்டு மக்களுக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி ஆரோக்கியமான கூட்டணி என்பதால் இக்கூட்டணி தொடரும்.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.