புதுச்சேரியில் 16 ஆண்டுகளாக இட வசதியின்றி இயங்கி வரும் கூட்டுறவு கல்வியியல் கல்லூரிக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கட்டிடத்தில் கடந்த 16 ஆண்டுகளாக கூட்டுறவு பி.எட் கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் தேசிய ஆசிரியக் கல்விக் குழுமத்தின் மூலம் வழங்கப்பட்ட அங்கீகாரம் போதிய கட்டிட வசதி இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மாணவர் சேர்க்கையும் தாமதமானது. இதற்கிடையே புதுச்சேரி முதல்வர் தலையிட்டு கல்லூரி வளாகத்தை உடனடியாக மாற்ற உத்தரவிட்டார். அதன் பிறகு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் மூலம் தற்காலிக ஆணை பெறப்பட்டு 2021-2022 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. கடந்த நவம்பர் மாதம் முதல் புதுச்சேரி பல்கலைகழகத்தின் வழிகாட்டுதலின்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு தற்போது இயங்கி வரும் கூட்டுறவு ஒன்றிய பழைய கட்டிடத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கூட்டுறவுக் கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தற்போது இயங்கி வரும் பழைய கட்டிடத்தில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்கும் நிலையில் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. இதனால் இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இங்குள்ள நூலக அறையில் 5 மாணவர்கள் கூட அமர்ந்து படிக்கும் வசதி இல்லை. ஆய்வுக்கூடங்களில் போதிய வசதி இல்லை. இதன் காரணமாக தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் மூலம் ஒரு கல்வி ஆண்டுக்கு100 மாணவர்கள் சேர்க்கைக்கு அங்கீகாரம் இருந்தும் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றன.
இதனால் கல்லூரி நிதி ஆதாரம் பெருக்குவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இருந்தும் கல்லூரி தொடர்ந்து இந்த பழைய கட்டிடத்தில் செயல்படுவதால் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியமும் வழங்க முடியவில்லை.
கல்லூரியை மேம்படுத்தவும் புதிய படிப்புகளை தொடங்குவதற்கும் முடியாத சூழல் தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் இரண்டு மாதங்களாக பிஎட் கல்லூரியானது கூட்டுறவு ஒன்றிய கட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விண்ணப்பமும் 2021 – 2022ம் ஆண்டுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. இதனால் இங்கே பிஎட் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கூட்டுறவு கல்வியல் கல்லூரிக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் மூலம் வழங்கப்படும் நிரந்தர அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் பேராசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் நிரந்த அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை ஊதியமாக கொடுக்காமல் வேறு வேலைகளுக்கு செலவினம் செய்யப்படுகின்றன.
அதுபோல் புதுச்சேரியில் உள்ள மற்ற சமுதாயக் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் ஏழாவது ஊதியக்குழு ஊதியம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த 16 ஆண்டுகளாக சிறந்த ஆசிரியர்களை உருவாக்கிவரும் இக்கல்லூரி புதுச்சேரி அரசு உயர் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் அரசால் நடத்தப்படும் ஒரே கல்வியியல் கல்லூரி கூட்டுறவு கல்வியில் கல்லூரி மட்டுமே. ஆகையால் இக்கல்லூரியில் புதுச்சேரி ஒன்றிய நிர்வாகத்திலிருந்து பிரித்து சமுதாய கல்லூரிகளோடு இணைக்கப்பட வேண்டும். இப்பிச்சினையில் புதுச்சேரி முதல்வர் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.