சென்னை: “திமுக தேர்தல் வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி ரூ.1200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி வழங்கி, வழக்கம்போல மக்களை ஏமாற்றும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி ரூ.1200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை தினந்தோறும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையே போதாத போது முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூ.200 மட்டும் உயர்த்துவது எந்தவகையிலும் நியாயம் ஆகாது. எனவே வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் உதவித்தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.