புதுச்சேரி: மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என்று முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான மிகவும் அவமானகரமான செயல் இந்தியர்களை மட்டுமல்ல உலகமக்களின் மனசாட்சியை உலுக்கி மிகப்பெரிய கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்த குரூரமான செயலுக்கு எந்தவிதமான சாக்கு போக்கும் சொல்லாமல் மணிப்பூர் மாநில அரசும் மத்திய அரசும் இந்த கொடூரத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு முடிந்தவரை அதை சீர்செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். மணிப்பூர் முதல்வரை அந்த பதவியிலிருந்து நீக்கி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

மணிப்பூர் பெண்குலத்துக்கு இழைக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரம் எந்த வகையான மற்ற குற்றங்களுடனும் ஒப்பிடவே கூடாது- முடியாது, ஏனென்றால் இந்த சம்பவம் பொதுமக்களுக்கு இரண்டரை மாதங்கள் கழித்துதான் தெரியவந்துள்ளது.அதுவும் அந்த சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகுதான் எல்லோருக்கும் தெரியவந்தது.இந்த இரண்டரை மாதம் என்பது பல விசாரணைக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இந்தக் கொடுமையைக் கண்டிக்க எந்த வார்த்தையும் எனக்கு கிடைக்கவில்லை.

காட்டுமிராண்டித்தனமான,மனிதகுலத்துக்கு குறிப்பாக பெண்குலத்துக்கே இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி,கொடூரம்,குரூரம். மனசாட்ச்சியுள்ள யாரும் இதைக் கடுமையாக கண்டிக்காமல் இருக்க முடியாது.இது சம்மந்தமாக என்னுடைய கடுமையான கன்டணங்களை மத்திய பாஜக அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரபூர்வமாக இப்போது நான் அறிவிக்க விரும்புவது பாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என்பதே. பொதுமக்களுக்கான எனது பணியும் போராட்டமும் என்றும் தொடரும், என்று அவர் தெரிவித்துள்ளார்.