நாகர்கோவில்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி கோப்பை பயணம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து நேற்று தொடங்கியது. வரும் 31-ம் தேதி சென்னையை அடையும் இந்த கோப்பை, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்படுகிறது.

ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி, 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி வெற்றி கோப்பை கன்னியாகுமரியில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

முக்கடல் சங்கமத்தில்…: இந்த வெற்றி கோப்பையை சென்னையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிலையில், வெற்றி
கோப்பை பயணம் தொடக்க விழா கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நேற்று நடைபெற்றது.

ஹாக்கி கோப்பையை மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் டிக்சன் தலைமையில் விளையாட்டு வீரர்கள் எடுத்து வந்தனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மேயர் மகேஷ், மாவட்ட எஸ்பி. ஸ்ரீநாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் வெற்றி கோப்பை பயணம் தொடங்கியது. இதில் ஹாக்கி வீரர்கள் பங்கேற்றனர்.

முதல்வரிடம் ஒப்படைப்பு: திருநெல்வேலி, தென்காசி, கோவில்பட்டி, சிவகாசி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல்,புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், கோவை, குன்னூர், புதுச்சேரி, ஈரோடு, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக ஜூலை 31-ம் தேதி வெற்றிக்கோப்பை சென்னை சென்றடைகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி கோப்பை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படுகிறது.