சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நாளை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டது. இதில், ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது.

ஆனால், இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக இல்லை. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக அதிமுக கட்சி தலைமை குற்றம் சாட்டியது. அதிமுகவின் இந்த அறிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது. இதிலும், 5 கிலோ தங்க நகைகள், 136 கனரக வாகனங்கள், பல கோடி மதிப்பு சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கும் அதிமுக கட்சி தலைமை கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை காலை 11 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். கவர்னரும் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி புகார் அளிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியுடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட சிலரும் செல்கிறார்கள்.தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பின், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்க உள்ளது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here