புதுச்சேரி: புதுச்சேரியின் தனிப்பெருமையே இங்குள்ள பல பாரம்பரிய கட்டிடங்கள்தான். இக்கட்டிடங்களைக் காண வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவது வழக்கம். புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த மேரி கட்டிடம் மிக பழமையான கட்டிடமாக இருந்தது. பாரம்பரிய பிரெஞ்சு கட்டிடப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது.

நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்டிடம் இடிந்து விழுந்தது. புதுவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த மேரி கட்டிடத்தை, அதே இடத்தில் பழமை மாறாமல் மீண்டும் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியான, பழமை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.14.83 கோடியில் இதற்கான கட்டுமானப் பணி தொடங்கியது. சுமார் 690 சதுர மீட்டரில் பிரதான கட்டிடம், தரைத்தளம், முதல் தளம், கருத்தரங்க கூடம், திருமண பதிவு அறை உள்ளிட்டவைகள் பாரம்பரிய பழைய கட்டிடப் பாணியில் கட்டப்பட்டன.

இந்தத் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேரி கட்டிடத்தை கடந்த 2021 பிப்ரவரி 25-ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் திறந்து வைத்து 29 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் மேரி கட்டிடம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “முதல்வர் ரங்கசாமி கடந்தாண்டு டிசம்பரில் நேரில் வந்து மேரி கட்டிடத்தை பார்வையிட்ட போது, இதை நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார். அதன்பிறகு ஆளுநர் மாளிகை பழுதடைந்துள்ளதால் ஆளுநர் மாளிகை மேரி கட்டிடத்துக்கு இடம் மாறும் என்றனர். இதில் முழு முடிவு எடுக்கப்படவில்லை. அதனால் இக்கட்டிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை” என்கின்றனர். பிரதமர் திறந்து வைத்த கட்டிடமே செயல்பாட்டுக்கு வராமல் மூடிக்கிடப்பது விநோதமாக தெரிகிறது என்று புதுச்சேரி மக்கள் கூறத் தொடங்கி விட்டனர்.

கடற்கரை ஹோட்டல்: புதுச்சேரி கடற்கரையில் பழைய சாராய வடி ஆலை இயங்கியது. அது வில்லியனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் கால் நுாற்றாண்டாக, இந்த இடம் பயன்படுத்தப்படாமல் மோசமடைந்தது. இதையடுத்து அரசு சார்பில் சுற்றுலா மேம்பாட்டுக்காக அப்பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த இடத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகையில் ஹோட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் ரூ.13 கோடி செலவில் தொடங்கி நடந்து வந்தது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டரில் கீழ்தளம், 2,500 சதுர மீட்டரிலும், அதற்கு மேல் சிறிய பகுதி மற்றும் முகப்பு பகுதி என 6,500 சதுர மீட்டரில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

கீழ்தளத்தில் விழா நிகழ்வுகள் நடத்தும் வகையில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளும் கடல் அழகைப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் திறந்த வெளி திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் அறையில் தங்குபவர்கள் கடல் அழகை அருகே சென்று பார்க்கும் வகையிலும் கட்டுமானப் பணி நடந்துள்ளது.

கட்டிடத்துக்கு வர்ணம் பூசும் பணி கடந்த 2022 மார்ச்சில் நடந்து முடிந்தது. ஆனால் 15 மாதங்களைக் கடந்தும் பயன்பாட்டுக்கு வராமல் இந்த நவீன ஹோட்டல் பூட்டியே கிடக்கிறது. இதுபற்றி விசாரித்தால், “நீதிமன்ற வழக்கால் இறுதிகட்ட பணிகள் நடக்கவில்லை” என்கின்றனர்.

பயன்பாட்டுக்கு வராத விடுதி: மத்திய அரசின் சுற்றுலா அமைச்சக நிதி கொடையின் கீழ், புதுச்சேரி முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமம் கடந்த 2016-ல் உருவானது. இங்கு, 2019-ல் ரூ. 3.5 கோடியில், ‘பிரான்ஸ் கோ தமிழ் கிராமம்’ தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்த விடுதி தமிழ் – பிரெஞ்சு, ஆந்திர, கேரள மாநில கட்டிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது.

தமிழ் கலாச்சாரத்தின்படி ஓட்டு வீடு, திண்ணை, நிலா முற்றங்களுடன் அமைக்கப்பட்டது. மேலும் கேரளத்தில் உள்ள பாரம்பரிய சாய்வு ஓட்டு வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு இரு ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை.

“மத்திய அரசின் ரூ. 30 கோடி நிதியில் உருவான இந்த 3 கட்டிடங்களும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கியே கிடக்கிறது. இத்தனைக்கும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியே நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் சரியாக முறையாக நடைபெறுகிறதா என ஆராய்ந்து, அதை உடனுக்குடன் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள துணைநிலை ஆளுநர் இருந்தும் இந்நிலை நிலவுவதுதான் வித்தியாசமாக உள்ளது” என்று இங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.