சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாட்டில் சிறந்த புத்தொழில் சூழமைவினை உருவாக்க தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற இரண்டு புதிய முன்னெடுப்புகளை தொடங்குகிறது. எதிர்வரும், 31.05.2022 (செவ்வாய்கிழமை) அன்று, ஐ.ஐ.டி ஆய்வுப் பூங்கா (IIT-M Research Park) வளாகத்தில் உள்ள, ஆம்பிதியேட்டர் (Amphitheatre) அரங்கத்தில்  சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள் இந்நிகழ்வினை மாலை 4.00 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.StartupTN BrandLabs என்பது, புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவில் ஆர்வமுடையோர், மாணவர்கள், வெற்றியடைந்த தொழில் ஆளுமைகள், தொழில்முனைவு வல்லுநர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் களமாகும்.

தமிழ் நாட்டில் பல புத்தொழில் நிறுவனங்கள் புதுமையான தயாரிப்புகளை உற்பத்தி செய்தாலும், சந்தைப்படுத்துதலிலும் வணிகச்சந்தையில் தனித்துவமான ஒரு இடத்தை அடைவதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களுக்கான தீர்வுகளை காணும் களமாக இது அமையும். சந்தைப்படுத்துதல் (Marketing) மற்றும் தனித்த வணிக அடையாளத்துடன் விளங்குதல் (Branding) குறித்த கற்றல் நிகழ்வுகளும், அனுபவ பகிர்வுகளும் இவ்வரங்கில் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக StartupTN Launchpad நடைபெறும். StartupTN Launchpad என்பது புத்தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக அமையும்.

மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வில், சிறந்த, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளியிடும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது நிறுவன தயாரிப்புகளை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுவர். மேலும், தொடர்ந்து சந்தைப்படுத்துதல், தனித்த வணிக அடையாளத்தை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் வழங்கப்படும். www.startuptn.in என்ற இணையதளத்தில், StartupTN launchpad என்ற இணைப்பின் கீழ் இதற்கான விண்ணப்ப படிவம் இருக்கும்.

பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.முருகவேல் ஜானகிராமன், நேச்சுரல்ஸ் சலுன் &ஸ்பா வின் இணைநிறுவனர் திரு.குமாரவேல், டெண்டர் கட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.நிஷாந்த் சந்திரன், சாய் கிங்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு. ஜபகர் சாதிக், திரு. விஜய் அனந்த், தலைமை செயல் அலுவலர், தி ஸ்டார்ட் அப் சென்டர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க தலைமை செயல் அலுவலர் திரு. சிவராஜா ராமநாதன் ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடல் அமர்வும், தொடர்ந்து பங்கேற்பாளர்கள் – உரையாளர்கள் இடையேயான கேள்வி-பதில் நிகழ்வும் நடைபெறும்.

இது குறித்த செய்தியினை தங்களது பத்திரிக்கையில் வெளியிடுமாறும், நிகழ்வுக்கு வருகைபுரிந்து நிகழ்ச்சி குறித்தான செய்தியினையும் வெளியிட்டு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.