திருச்சி: கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக ஹவுராவுக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு தினமும் பிற்பகல் 1.10 மணிக்கு வந்து, 10 நிமிடங்களுக்குப் பிறகு புறப்படும்.
இதன்படி, நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய 3-வது நடைமேடைக்கு ஹவுரா ரயில் வந்தது. அப்போது, முன்பதிவில்லா டிக்கெட் வாங்கி காத்திருந்த 400-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்களில், சிலர் முன்பதிவு பெட்டிகளிலும் ஏறி அமர்ந்தனர். இதனால், முன்பதிவு பெட்டியில் இருந்தவர்கள் கேள்வியெழுப்பியதால் வாக்குவாதம் நேரிட்டது. இந்த நேரத்தில் ரயில் புறப்பட்டது.
இதையடுத்து, முன்பதிவு பெட்டியில் இருந்த பயணிகள், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நிலைய அதிகாரிகள் வந்து சம்பந்தப்பட்ட பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற்றுள்ளவர்களை, அந்தப் பெட்டிகளுக்கு அனுப்புமாறு பயணிகள் கோரினர்.
இதேபோல, தங்களுக்கு ரயில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வடமாநிலத்தவர்கள் கோரினர். இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த குருவாயூர் விரைவு ரயிலில் வடமாநிலத்தவர்கள் சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினையால் ஒரு மணி நேரம் தாமதமாக ஹவுரா ரயில் புறப்பட்டுச் சென்றது.