கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இதனை கடந்த ஆண்டு ஆக. 24 பேரவையில் அறிவித்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்” என்றார்.

 

 

 

இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இருந்து.

இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரை, 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.