கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொழியாததால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கர்நாடகாவில் பெரும்பாலும் ஆண்டுதோறும் மே மாத இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு மே மாதத்தில் கோடை மழையும், ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பொழியவில்லை.

தென்மேற்கு பருவமழை ஒரு மாதத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவுகிறது.இதனால் ஆறுகளில் இருந்து நீர்வரத்து முற்றிலுமாக குறைறைந்துள்ளதால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

குடகு, மைசூரு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 77.48 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 106 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் மட்டுமல்லாமல் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜசாகர் அணையில் 28.59 டிஎம்சி நீர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 9.86 டிஎம்சி மட்டுமே உள்ளது.

கபினி அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 8.26 டிஎம்சி நீர் இருப்பு இருந்த நிலையில் இந்த ஆண்டு 4.27 டிஎம்சி மட்டுமே உள்ளது. துங்கப்பத்ரா அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 44.35 டிஎம்சி நீர் இருப்பு இருந்த நிலையில் இந்த ஆண்டு 4.27 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளிலும் கடந்த ஆண்டை விட சுமார் 70 சதவீதம் குறைவான அளவிலே நீர் இருப்பு உள்ளது.

இதே நிலை அடுத்த இரு வாரங்களுக்கு நீடித்தால் மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ்நகர், மண்டியா, பெல்லாரி, விஜயபுரா உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறப்பதிலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

அமைச்சர் ஆலோசனை: இந்நிலையில் கர்நாடக கிராம பஞ்சாயத்து ராஜ்ஜியம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது தொடர்பாக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவும் 16 மாவட்டங்களுக்கு 1500 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிப்பது, 500 ஆழ்துளை கிணறுகள் நீர் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.