நெல்லை மாவட்டத்தில் அரசிடம் முறையாக அனுமதி பெற்ற கல் குவாரிகள் செயல்படலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் மே 14-ல் பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் இறந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து நெல்லை மாவட்டத்தில் இயங்கி வந்த அனைத்து கல் குவாரிகளையும் மூட உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ”நெல்லை மாவட்டத்தில் அரசிடம் உரிய அனுமதி பெற்று கற்கள், ஜல்லி, கிராவல் மற்றும் எம்.சாண்ட் குவாரிகள் நடத்தி வருகிறோம். குவாரிகளிலிருந்து கற்கள், ஜல்லி, கிராவல் மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை கொண்டு செல்லவும் உரிமம் பெற்றுள்ளோம். அரசுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை முறையாக செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒரு கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளையும் மூட வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது. கற்கள், ஜல்லி, கிராவல் மற்றும் எம்.சாண்ட் கொண்டுச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பல்வேறு கல் குவாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் 2 மாதங்களாக கல் குவாரிகள் செயல்படாமல் இருப்பதால் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் தடைபட்டுள்ளது. குவாரிகள் செயல்பட அனுமதி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நெல்லை மாவட்டத்தில் கல் குவாரிகள் செயல்படவும், கல், ஜல்லி, கிரவால் மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை வாகனங்களில் கொண்டுச் செல்லவும் பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, அரசின் முறையான அனுமதி பெற்ற செயல்படும் குவாரிகள் தொடர்ந்து செயல்படவும், கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற கனிமங்களை கொண்டுச் செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.

விதிமீறல் தொடர்பாக குவாரிகளுக்கு ரூ.300 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை ஆட்சியர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிப்பது தொடர்பாக நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.