சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, வனவாசி, பேளூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில், சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக, தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மேட்டூரை அடுத்த நங்கவள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 3, காங்கிரஸ் 3, அதிமுக 2, பாமக 2, பாஜக 1, இந்திய கம்யூனிஸ்ட் 1, சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் திமுக, அதிமுக-வுக்கு இடையே இழுபறி நிலவியது. இந்நிலையில், தேர்தலின்போது, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
வனவாசி-பேளூர் பேரூராட்சி
வனவாசி பேரூராட்சியில் 12 வார்டுகளில் அதிமுக 8, திமுக 3, சுயேச்சை ஒருவர் என வெற்றி பெற்றிருந்தனர். அதிமுக-வுக்கு பெரும்பான்மை இருந்ததால், தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றும் நிலை இருந்தது. இந்நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியதால், வனவாசி பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக-வினர் தேர்தல் அலுவலர்கள் திமுக-வுக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழப்பாடியை அடுத்த பேளூர் பேரூராட்சியின் 15 வார்டுகளில், திமுக 6, அதிமுக 6, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு திமுக மற்றும் அதிமுக-வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று தொடங்கப்பட இருந்த நிலையில், அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
காடையாம்பட்டி பேரூராட்சியின் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.