கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதன்கிழமை, ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகம் மற்றும் விஜயவாடாவில் உள்ள கட்சியின் செய்தித் தொடர்பாளர் பட்டாபி கே ராம் குடியிருப்பு ஆகியவற்றை யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி (ஒய்எஸ்ஆர்சிபி) தொண்டர்கள் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கு தேசம்கட்சியின் மத்திய அலுவலகத்தை தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 356 வது பிரிவின் மூலம் ஆந்திராவில் குடியரசுத் தலைவர்ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்.

எதிர்க்கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு ஆளும் அரசாங்கமே பொறுப்பு. இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதைக் காட்டுகிறது. காவல் துறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஒரு பணியாளராக செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் காவல்துறை தோல்வியடைந்தால் எங்கள் கட்சிக்கு சொந்த பாதுகாப்பை நாங்கள் ஏற்போம்.

ஒய்எஸ்ஆர்சிபி கட்சி ஆட்கள், தெலுங்கு தேசக் கட்சி அலுவலகத்தை தாக்கியுள்ளனர். போலீஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடந்தது என்னவென்றால் தெலுங்கு தேசக் கட்சித் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆந்திராவில் போலீஸ் துறை இப்படித்தான் செயல்படுகிறது. உண்மையில் தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் மக்களுக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் போராடி வரும் கட்சி. போதைப்பொருள் இல்லாத மாநிலமாக ஆக்குவதற்கும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறாம்.

இந்த வகையான தாக்குதல்கள் மற்றும் வழக்குகள், துன்புறுத்தல் தெலுங்கு தேசம் கட்சியை பலவீனப்படுத்தாது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.