சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 120-வது வார்டு, முத்தையால் தெருவில் ரூ.3 கோடியே 4 லட்சத்தில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமானது தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.3 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 700.94 சமீ பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படவுள்ளது. இந்தப் பணிகள் 18 மாத காலத்துக்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் எம்பி தயாநிதி மாறன், வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) எஸ்.காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.