அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த பொருட்களை மீட்டுத் தரவேண்டும்” என்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக தென்சென்னை (வடக்கு, கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜராம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் விவரம்: “கட்சியினுடைய பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தச் சொல்லி பொதுக்குழுவின் 80 சதவீத உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 11.07.2022 காலை 9.15 மணிக்கு சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி வழக்கில் இடைக்கால உத்தரவு தொடர்பான மனுவில், பொதுக்குழு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் 11.07.2022 அன்று காலை 9 மணிக்கு அதனை தள்ளுபடி செய்தது. தலைமை கழக அலுவலகத்தை சில சமூக விரோதிகள் தாக்க முற்படபோவதாக கேள்விபட்டு கடந்த 08.07.2022 அன்று கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னை காவல்துறை ஆணையரிடமும் மற்றும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவை அளித்திருந்தார்.

11.07.2022 அன்று காலை 9.10 மணியளவில் கட்சி பொதுக்குழு நடத்துவதற்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வந்த நிலையில், தலைமைக் கழக அலுவலகத்தை தாக்க போவதாக கேள்விபட்டு அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, வெள்ளை நிற Tempo Traveller Van-ல் முன்பக்கம் அமர்ந்து கொண்டும், அவர் வாகனத்தின் முன் சுமார் 300 பேர் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் தெரிந்து காட்டக்கூடிய ரவுடிகள் மற்றும் குண்டர்கள் கையில் கத்தி, கடப்பாறை, தடி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் பெரிய கற்களை வீசிகொண்டே தலைமை கழகம் நோக்கி சென்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில், எம்எல்ஏக்கல் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம், மைக்கில் “யாராயிருந்தாலும் வெட்டுங்கள், அடித்து உதையுங்கள்” என்று சொல்ல மேற்படி ரவுடிகள் ரோட்டில் நின்று கொண்டிருந்த கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

தலைமைக் கழக அலுவலகம் வந்த அவர்கள் பூட்டப்படிருப்பதைப் பார்த்த ஓ.பன்னீர்செல்வம், ” டே கேட்டை அடித்து உடையுங்கள்” என்று சொன்னவுடன் அவருடன் வந்த குண்டர்கள் கடப்பாறைக் கொண்டு பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். கட்டிடத்தின் மெயின் கதவை கடப்பாறை, கத்தி, தடி கொண்டு தாக்கி திறந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த ரவுடிகள், அடியாட்கள் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.

அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அனைத்தையும் கொள்ளையடித்து, ஓபிஎஸ் கொண்டு வந்த வெள்ளை நிற Tempo Traveller Van-ல் ஏற்றிக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர். இவை அனைத்து காவல்துறை கண்ணெதிரேயும், அனைத்து ஊடகங்கள் முன்பும் இந்த கொலைவெறி தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது.

எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திட்டமிட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த அடியாட்கள், ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில் கொண்டுசென்ற அனைத்தையும் மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.