நடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீதக் கல்விக் கட்டணத்தை 6 தவணைகளில் வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்குத் தடை விதித்து, கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 75 சதவீதக் கட்டணத்தை, முறையே 40 மற்றும் 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடப்புக் கல்வியாண்டில் 85% கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (ஜூலை 30) தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணகுமார், நடப்புக் கல்வியாண்டில் வருவாய் இழப்பு இல்லாத அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெற்றோர்களிடம் 85 சதவீதக் கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், கரோனா ஊரடங்கால் வருவாய் இழந்த பெற்றோர்களிடம் 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே 6 தவணைகளாக வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் கூடுதல் கட்டணச் சலுகை கோரி பள்ளிகளை அணுகலாம் என்றும், அதனைத் தனியார் பள்ளிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, கட்டணச் சலுகையில் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் பிரச்சினை எழுந்தால் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு மனு அளிக்கலாம் எனவும், அந்த மனுவைப் பரிசீலித்து 30 நாட்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதைப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், தனியார் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட பள்ளியில் படிப்பைத் தொடர விரும்பாவிட்டால் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுடைய கட்டண விவரங்களை இணையதளத்தில் நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை எட்டு வாரங்களில் நிரப்ப வேண்டும் எனவும், 85 சதவீதக் கட்டணம் வசூலிக்க அனுமதித்து திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை அரசு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்குகளை முடித்துவைத்தார்.