தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொளத்தூர் குருகுலம் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின்கீழ் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட 135 பயனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி, முதியோர், கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித் தொகைகளுக்கான ஆணைகள், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கருணாநிதி நினைவு நாளையொட்டி கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மொத்தம் 1,330 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் கல்வி உபகரணங்களை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., தாயகம் கவி எம்எல்ஏ மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.