தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போ 2022 -ல் கலந்து கொண்டு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீஸில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here