புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லிக்கு பயணம் செய்த ரங்கசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து மனு தந்தார், கூடுதல் நிதியுதவி தராவிட்டால் பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. கடந்த ஆண்டு மே மாதம் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். ஆனால், அவர் டெல்லி சென்று பிரதமர் மோடியை 15 மாதங்களாக சந்திக்கவில்லை. இது கூட்டணியில் அதிருப்தி ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான ரூ 11,000 கோடி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. வரும் பத்தாம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதையடுத்து நேற்று இரவு முதல்வர் ரங்கசாமி திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டார்.
தேர்தலில் வென்று முதல்வராகி 15 மாதங்கள் கடந்த நிலையில் முதல்வர் தற்போது டெல்லி புறப்பட்டு சென்று இன்று பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன ஆகியோரை சந்தித்து மனுக்களை வழங்கியுள்ளார்.
இது நடப்பாண்டு ரூ.1724 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது தோராயமாக கடந்த ஆண்டை விட 150 கோடி ரூபாய் குறைவு. மத்திய அரசின் கூடுதல் உதவியாக ரூ.2000 கோடி வழங்காவிட்டால், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது.
அதேபோல் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ. 425 கோடி வழங்க வேண்டும், புதிய சட்டப்பேரவை கட்ட ரூ. 300 கோடி தரவேண்டும், சுகாதார கட்டுமானத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி தேவை. கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ.500 கோடி தேவை. நகர்புற மற்றும் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ. 150 கோடி நிதி தேவை. நீண்ட கால நிலுவையிலுள்ள மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்டவை பற்றியும் முதல்வர் ரங்கசாமி கோரிக்கையாக பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் முன்வைத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.