கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாஜகவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளையில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்துக்கு வராததால் அக்கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம் சார்பில், கோலார் நகரில் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியை விமர்சித்ததால் சிறை தண்டனைக்கு காரணமான அதே கோலார் நகரில் இருந்து ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என காங்கிரஸார் விளம்பரப்படுத்தினார். ஆனால், அந்தப் பொதுக் கூட்டம் திடீரென 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ராகுலின் பொதுக் கூட்டம் ஏப்ரல் 16-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.

இரண்டு முறை தொடர்ந்து ராகுலின் பொதுக்கூட்ட தேதி மாற்றப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேவேளையில் பாஜகவினர், கர்நாடக தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்பது ராகுல் காந்திக்கு தெரிந்துவிட்டது. அதன் காரணமாகவே இங்கு வராமல் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளார் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.