இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், ‘‘ராகுல், பிரியங்கா ஆகிய இருவரில் யார் என்பது அவர்களது கட்சி விவகாரம். இதில், காங்கிரஸ் தேசியத் தலைவராக அமர்வது யார் என்றும் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. இப்பிரச்சினையில் ஒருவரை விட மற்றொருவரை உயர்த்தி காண்பிக்கும் முயற்சி நடக்கிறது. இதற்காக மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் ஆட்சிகளை கவிழ்க்கவும் தயங்குவதில்லை. ராகுலின் பேச்சுக்களை காங்கிர ஸாரே பொருட்படுத்துவதில்லை’’ என்றார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் என ஓங்கி ஒலித்தக் குரல்கள் தற்போது அடங்கத் தொடங்கிவிட்டன. ராகுல் தலைவரானாலும், ஆகாவிட்டாலும் காங்கிரஸை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி காலி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதை தடுத்து கட்சியை காப்பாற்ற பிரியங்காவால் மட்டுமே முடியும். இது, லக்கிம்பூர்கேரி உள்ளிட்ட உ.பி. விவகாரங்களில் பிரியங்கா நடத்திய தீவிரப் போராட்டங்களில் தெளிவாகி விட்டது’’ எனத் தெரிவித்தனர்.