தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து இன்னும் ஓராண்டு முடியாத நிலையில், அதன் தாக்கம் தற்போது நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இருக்கக்கூடும் என்பது தர்க்கபூர்வமான எதிர்பார்ப்பு. உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கையில், திமுக தலைமையிலான மாநில அரசின் பதவிக்காலமும் கருத்தில் கொள்ளப்படும் என்ற யூகங்களும் அதற்கு வலுசேர்க்கலாம்.
ஆனால், கடந்த சில மாதங்களின் அரசியல் போக்குகளைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தலைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் வெற்றியை அவ்வளவு எளிதில் பரிசளித்துவிடாது என்றே தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான அதே நேரத்தில், பொங்கல் பரிசு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தியும் வெளிவந்தது. அனைத்து மக்களுக்குமான பெருந்திட்டம் ஒன்றில், நடந்த ‘கவனக்குறைவு’க்குத் தனியொரு அதிகாரியைப் பொறுப்பாக்கிவிட்டதால் மக்களின் அதிருப்தி குறைந்துவிடுமா என்பது ஒரு முக்கியமான கேள்வியாக எதிர்நிற்கிறது.
திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் விட்டுப் பிரியப்போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியிருக்கிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து நின்று தேர்தல் களத்தைச் சந்திக்கும் நிலையில் இல்லை என்று பொருள்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பாஜக எதிர்ப்பின் அடிப்படையில், இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து நிற்கையில், பாஜக தன்னந்தனியாகவே உள்ளாட்சித் தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. அதிமுகவுடனான கூட்டணி தொடர்ந்தாலும், தங்களது எதிர்பார்ப்புக்கேற்றவாறு அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற முடியாத நிலையிலேயே பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு அதிமுக தரப்பிலிருந்து வந்துள்ள ஆதரவு, இரண்டு கட்சிகளுக்கும் இடையே உடனடி விரிசலுக்கு வாய்ப்பில்லை என்பதையே தெரிவிக்கிறது. பொதுத் துறைச் சொத்துகளை விற்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமமுக, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான நிதி ஒதுக்கீடு, நதிநீர் இணைப்புத் திட்ட அறிவிப்பு ஆகியவற்றை வரவேற்றுள்ளது. அமமுகவின் தரப்பிலும் பாஜகவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அமமுக தனித்து நின்று போட்டியிட்டாலும்கூட, வெற்றிபெற முடியாத இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவளிக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது. எனினும், உள்ளூர்த் தலைவர்களுக்கு இடையிலான தேர்தல் வியூகங்களே இவற்றையெல்லாம் முடிவுசெய்யக்கூடும்.
சட்டமன்றத் தேர்தலைப் போலவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மூன்றாவது இடம் யாருக்கு என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. வெற்றிபெறும் இடங்களைக் காட்டிலும் வாங்குகிற வாக்குகளின் மொத்த எண்ணிக்கைக்கும்கூட முக்கியத்துவம் உண்டு. பாஜக, அமமுக, தேமுதிக, மநீம, நாதக ஆகியவை தனித்தனியாகக் களத்தில் நிற்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் கட்சி, கொள்கைகள் அனைத்தையும் தாண்டி, உள்ளூர் அளவில் பொதுப் பணிகளில் பிரதிபலன் எதிர்பாராது அக்கறையுடன் பங்கேற்பவர்களே மக்கள் பிரதிநிதிகளாக அமர்த்தப்பட வேண்டும் என்பதே முக்கியமானது.