அமெரிக்காவின் ஒமைக்ரான் தொற்றால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம்பேருக்கு ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அமெரி்க்கா முழுவதையுமே ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் 6 மடங்குஅதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 0.4 சதவீதம் இருந்தநிலையில் இது அடுத்த 10 நாட்களில் 2.9 சதவீதமாக, ஏறக்குறைய 6 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 50 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கவுன்டி நீதிபதி லீனா ஹிடால்கோ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒமைக்ரான் தொற்றால் பலியான முதல் உள்ளூர்வாசி. தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். ஏற்கெனவே செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட அறிக்கையின்படி 73% பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

டிசம்பர் தொடக்கத்தில் பிரிட்டனில் முதல் ஒமைக்ரான் பலி உறுதியான நிலையில் அங்கு இதுவரை 12 பேர் ஒமைக்ரானால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவிலும் ஒமைக்ரான் முதல் பலி பதிவாகியுள்ளது.