தொழில் துறையில் தமிழகத்தை முதல் இடத்துக்கு கொண்டுவரும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சி துபாயில் நடைபெற உள்ளது. இம்மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இதில், தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் தொடர்பான அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தின் மூலம் தமிழகத்தில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
மேலும், துபாயில் தமிழகம் சார்பில் அமைக்கப்படும் காட்சி அரங்கை திறந்துவைத்துப் பங்கேற்பதுடன், முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக வரும் 26, 27-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டுப் பயணமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.