சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செஸ் போட்டியில் கலந்துக் கொள்பவர்களையும், பார்வையாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்கும் வகையில் ’வணக்கம் செஸ் சென்னை’ என்ற தீம் பாடல் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த தீம் பாடலுக்கு, இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக செஸ் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 44-வது செஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு ஆல் இந்திய செஸ் அசோசியேஷன் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.