அரூர் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மான்கள், காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதம் வனப்பரப்பை கொண்டதாகும். தமிழகத்தில் அதிக வனப்பரப்பை கொண்ட மாவட்டங்களில் தருமபுரி 2-வது இடத்தில் உள்ளது. தேசிய வனக்கொள்கைப்படி மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். தேசிய சராசரியை விட அதிக வனப்பகுதி கொண்ட தருமபுரி மாவட்டத்தில் தாவர இனங்கள், வன விலங்குகள், பறவை இனங்கள், ஊர்வன, பூச்சிகள் போன்ற பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன. இதேபோல யானை, கரடி, காட்டெருமை, எறும்பு தின்னி, மலைப்பாம்பு, நரிக்கொம்பு மான், புள்ளி மான், கழுதைப் புலி உள்ளிட்ட அரியவகை வன விலங்குகள் உள்ளன. சந்தனம், தேக்கு உள்ளிட்ட பல அரிய வகை மரங்களும் தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் காணப்படுகின்றன.

விலங்குகள் அதிகரிப்பு: அரூர் வனப்பகுதியில் அமைந்துள்ள அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி வனச்சரகங்களில் புள்ளிமான், காட்டுப்பன்றிகள், முயல்கள் என சிறு விலங்கினங்களும், மயில்கள் அதிக அளவிலும் உள்ளன. யானை, கரடி போன்றவை இப்பகுதியில் இல்லை. தெளிவாக கணக்கிட முடியாவிட்டாலும் சுமாராக கடந்த 5 ஆண்டுகளாக இந்த வனப்பகுதியில் மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகாித்துள்ளதாக வனத் துறையினர் தொிவித்துள்ளனர். வழக்கமாக காடுகளில் ஒரு வகையான உணவுச்சங்கிலி நிலவுவது வழக்கம். ஒவ்வொரு உயிரையும் வேட்டையாடி உண்ணும் மற்றொரு உயிாினம் வாழும். அதன்மூலம் விலங்குகளின் இனப் பெருக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வனத்துறை தீவிர கண்காணிப்பு: ஆனால், அரூர் பகுதிகளில் மான் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடக் கூடிய பொிய விலங்கினங்கள் இல்லை என்பதால் சமீப காலத்தில் இவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இது தவிர வனப்பகுதியில் உணவிற்காக மான் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதும் வனத்துறையினாின் தீவிர கண்காணிப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பெருகியுள்ள மான் மற்றும் காட்டுப்பன்றிகள் காரணமாக வனப் பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் பயிாிடப்பட்டுள்ள பயிர்கள் பெரும் சேதத்திற்குள்ளாகி வருகின்றன. அதிலும் நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு மற்றும் காய் வகைகள் பயிாிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்கவோ, வேட்டையாடவோ முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகை வனத்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதற்கான ஆதாரமாக புகைப்படம் மற்றும் கிராம நிா்வாக அலுவலாின் சான்றுகளுடன் அப்பகுதியைச் சார்ந்த வனத்துறை அலுவலரை அணுகினால் அவர்களுக்கு மாவட்ட வனத்துறையின் மூலம் விரைவாக இழப்பீடு அவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும். விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.