மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் மாயமான 43 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடலோர மாவட்டமான ராய்காட் மாவட்டத்தின் மகாத் தெஹ்சில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகினர். இதற்கிடையில், கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மற்ற பகுதிகளில் இருந்து அவை துண்டிக்கப்பட்டன. சாலைகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள், வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்பு பணிக்காக கடற்படை மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை ராய்காட் மாவட்டத்தில் உள்ளமஹாத் தெஹ்சிலிலும் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லூனிலும் முகாமிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் (என்டிஆர்எஃப்) பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர்.

ராய்காட் மாவட்டம் மகாத் தெஹ்சிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அருகில் உள்ள பகுதியில் 3 வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. இந்த பேரிடரில் மொத்தம் 73 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதனிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் இயக்குநர் ஜெனரல் எஸ்.என். பிரதான் கூறியதாவது: நிலச்சரிவு ஏற்பட்ட மகாத் தெஹ்சில் பகுதிஉட்பட பல்வேறு இடங்களில் இருந்துமொத்தம் 73 சடலங்களை என்டிஆர்எஃப் குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் மாயமான 47 பேரைத் தேடிவருகிறோம்.நிலச்சரிவால் இதுவரை 112 பேர் இறந்துள்ளனர். 1 லட்சத்து 35,313 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். மீட்புப்பணிகளில் 34 குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

கிருஷ்ணா, பஞ்ச்கங்கா உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வரு கின்றன.