வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு பாதிப்பு குழந்தைகளில் அதிகரித்து வருகிறது என மருத்துவர் எச்சரித்துள்ளனர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி வரை 354 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது பத்து குழந்தைகள் மட்டுமே டெங்கு பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது 139 குழந்தைகளுக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டு 493 என எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்குவுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணி கல்லுக்குட்டை என்ற ஒரே பகுதியை சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியான கல்லுக்குட்டையில் மழைநீர் தேக்கம் அதிகரித்திருப்பதால் கொசு தொல்லை பகலில் இருப்பதாக பாதிக்கப்பட்ட 5 வயது ஆண் குழந்தையின் தாய் சுபாஷினி கூறுகிறார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாரசிடாமல் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி சீனிவாசன் கூறுகையில், “குழந்தைகளுக்கு பாராசிடாமல் தவிர வேறு மருந்துகள் கொடுத்தால் பிளேட்லெட்( தட்டணுக்கள்) குறையக்கூடும். தட்டணுக்கள் குறைந்துள்ளதா என்பதை ஐந்து நாட்களுக்கு பிறகு தான் கண்டறிய முடியும். ஆனால் முதல் இரண்டு நாட்களில் செய்யப்படும் total blood count எனப்படும் பரிசோதனையிலேயே டெங்கு பாதிப்பாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே பாதிப்பு தீவிரமடையும் வரை காத்திருக்காமல் இரண்டாவது நாளிலேயே மருத்துவரை அணுகுவது அவசியம்” என்றார்.