திருச்சி: தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை செப்டம்பர் 9ம் தேதி திறப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனை கூறியுள்ளார். வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், அனைத்து வகை வகுப்புகளையும், குறிப்பாக தொடக்க பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான, ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு பள்ளிகள் தயாராகி வருகின்றன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு குழு அமைத்து அல்லது சுகாதார பணியாளர்களின் உதவியுடன் கண்காணிக்க வேண்டும் போன்றவை வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெற்றுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பள்ளிகள் தயாராக உள்ளனவா? என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.