சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரையில் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயார் செய்யும் பணியை தமிழக நெடுஞ்சாலைத் துறை துவக்கியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரையில் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஓர் உயர்மட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ரூ.45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒரு விரிவான ஆய்வு அறிக்கையை தயார் செய்வதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார். தற்போது இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயார் செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.

கலங்கரை விளக்கத்தில் தொடங்கி சாந்தோம் நெடுஞ்சாலை அல்லது பட்டினப்பாக்கம் லுப் சாலை வழியாக கிரீன்வேஸ் சாலை, துர்கா பாய் தேஷ்முக் சாலை , சர்தார் பட்டேல் சாலை மற்றும் அடையார் ஆற்றின் வழியாக கிண்டி சென்றடையும் வகையில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

கலங்கரை விளக்கம் சிக்னல், கச்சேரி சாலை சிக்னல், பட்டினப்பாக்கம் சிக்னல் , கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையார் சிக்னல், கஸ்தூரிபாய் நகர், மத்திய கைலாஷ் ஆகிய சிக்னல்களில் வழக்கமாக நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் நிலையில், அங்கெல்லாம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த உயர்மட்ட சாலை அமைப்பதற்கான முயற்சியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.