ஊரப்பாக்கம்: இந்து தமிழ் நாளிதழ் உங்கள் குரல் பகுதியில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த வாசகர் பத்ரி நாராயணன் கூறியதாவது: அதிக விபத்துகள் நடக்கும் பகுதி சென்னை – திருச்சியை இணைக்கும் முக்கிய சாலையாக ஜிஎஸ்டி சாலை உள்ளது. வண்டலூர், நந்திரவம் – கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், காட்டாங்கொளத்தூர் மறைமலை நகர் ஆகிய பகுதிகளில், ஜிஎஸ்டி, சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இதில் பல உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. சாலை நடுவில் உள்ள விளக்குகள் எரியதாதால் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக இந்த பகுதிகள் உள்ளன. ஆனால், விபத்துக்கான காரணங்களை தெரிந்தும் சம்மந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை. சாலை விளக்குகள் ஏரியததால் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தை நம்பியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், எதிர் திசை வாகனங்களின் விளக்கொளியால், விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை விளக்குகளை அமைத்து, பராமரிக்க வேண்டும். மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்கபெருமாள் கோவில், பரனூர் ஆகிய பகுதிகளில், பெரும்பாலும் சாலை விளக்குகள் இல்லாமலும் ஒரு சில இடங்களில், எரியாமல் பெயரளவுக்கு மட்டுமே விளக்குகள் இருப்பதுமே, பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகிறது.

ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் நடுநிசியிலும், பரபரப்பாக இயங்கும் சாலையில் விளக்குகள் எரியதாது பலரது வாழ்க்கையை இருட்டாக்கி விடுகிறது. இச்சாலையில் விளக்குகளை எரிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி கூறியதாவது: ஜிஎஸ்டி சாலை பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி வரை எட்டு வழியாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இரும்பு கம்பிகளை கொண்டு சாலை நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக மின்விளக்கு செல்லும் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தற்போது தற்போது சாலை பணி நிறைவடைந்து விட்டது. இதையடுத்து மின் விளக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் அனைத்து மின்விளக்குகளும் எரிய வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.