சிலம்பாட்டக் கலையின் பெருமை நாடு முழுவதும் சென்றடைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சிலம்பாட்டத்தை `கேலோ இந்தியா’வில் (விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய திட்டம்) இணைத்தமைக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சிலம்பாட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னை அயானாவரத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

பாஜக இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுப் பிரிவு, அனைத்து சிலம்பக் கூடங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 100 சிலம்பாட்ட ஆசான்கள் முன்னிலையில், 1,000 சிலம்பாட்ட வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுழற்றினர்.

கொட்டும் மழையில் நனைந்தபடி, வீரர்கள் சிலம்பம் சுற்றியதை ஏராளமானோர் கண்டுரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சிறந்த ஆசான்களுக்கு சான்றிதழ்வழங்கிப் பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

அகத்திய முனிவர் காலத்திலேயே சிலம்பம் வந்துவிட்டது. நமது கலை, பாரம்பரியத்தை சிலம்பாட்டம் மூலமாகத்தான் எடுத்துச் சொல்ல முடியும். எனவேதான், சிலம்பாட்டத்தை கேலோ இந்தியா விளையாட்டில் கொண்டுவர வேண்டுமென தமிழக பாஜக சார்பில்தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இதையடுத்து, கேலோ விளையாட்டில் சிலம்பாட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இது 8 கோடி தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். சிலம்பாட்டக் கலையின் பெருமை நாடு முழுவதும் சென்றடைய வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.